"கால்ல விழுறேன் மேடம்.. ஷூட்டிங் ஆட்சி வேண்டாம்.. நீங்க வந்ததால் இப்படி நாடகம் நடிக்குறாங்க.."- ஆட்சியரிடம் கெஞ்சிய நடத்துனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரை கண்டதும் மாநகர பேருந்தில் இருந்து இறங்கி வந்த நடத்துனர், “5 வருஷமா, 4 பேர் வைச்சு ஏமாத்துறாங்க... நீங்களும் ஷூட்டிங் ஆட்சியா மாறிடாதீங்க! மேம்பாலம் பணியில் சுணக்கம் உள்ளது. மேடம் உங்க கால்ல வேணாலும் விழுறேன், அசிங்க அசிங்கமா பஸ்ல பேசுறாங்க காதுல கேட்கவே முடியல.. தயவு செஞ்சு மேம்பாலப் பணிகளை சீக்கிரம் முடிக்க சொல்லுங்க. 5 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தயவுசெய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்துங்க” என கோரிக்கை வைத்தார்.

