அதிமுக அலுவலகத்தை தாக்க திட்டம் - ஜெயக்குமார் பரபரப்பு புகார்..

அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பொள்ளாச்சி ஜெயராமனும், நத்தம் விஸ்வநாதனும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையொட்டி இன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இனியும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையான நாளை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை நாளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்கிறார்.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உரிய பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் . ஏற்கனவே நடந்த சம்பவம் போல இந்த முறை நடக்கக்கூடாது என பாதுகாப்பு கோரியுள்ளோம் . காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்; இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்துள்ளது . ” என்று தெரிவித்தார்.