"வீடு தேடி வரும் பித்ருக்கள்!" – மகாளயபட்சத்தில் தவறவிடக் கூடாத சக்திவாய்ந்த வழிபாடு!

 
1

 மகாளயபட்ச காலத்தில் செய்யப்படும் அனைத்து தான தர்மங்களுக்கும் பித்ருக்களின் ஆசியும் சேர்ந்தே கிடைக்குமாம். இந்த 15 நாட்களிலும் நம் முன்னோர்களை வழிபட்ட பின்பே நம் நித்திய பூஜை புனஸ்காரங்களைச் செய்ய வேண்டும். இந்த முன்னோர் வழிபாட்டை பதினைந்து நாட்களும் செய்ய முடியா விட்டாலும், தங்கள் தந்தையின் திதி தினத்தன்றாவது மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

சுப காரியத் தடை, வாரிசு இல்லாதது, தீராத நோய், திடீர் விபத்துகள், துர்மரணங்கள் இவை எல்லாவற்றிற்கும் பித்ரு தோஷமும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்த மகாளய புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும்.

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’
என்கிறார் திருவள்ளுவர்.

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும் ஆகிய இல்வாழ்க்கை மேற்கொண்டவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற ஒருவன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

மகாளய பட்சத்தின் முடிவில் வரும் மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கும் தனிச் சிறப்பு உண்டு. மகாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிமிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இவர்கள் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடும். இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், காவிரிக்கரை முதலிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம் தழைத்தோங்கும். நம் முன்வினை துயர்கள் நீங்கி, பித்ருக்களின் அபரிமிதமான ஆசியால் நம் வாழ்வில் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும். பித்ருக்கள் என்றாலே வரங்களும் வாழ்த்துக்களும்தானே?