9ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் : 50,000 முகாமில் தடுப்பூசி!

 
vaccine

தமிழகம் முழுவதும் 9ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா  தற்போது படிப்படியாக குறைந்து வந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.  இதையடுத்து மது பிரியர்கள் , அசைவ பிரியர்களின் வசதிக்காக சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

vaccine

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட 8 மெகா தடுப்பூசி  முகாம்களில் 1.65 கோடி பேருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள்ளது வீடு தேடி  தடுப்பூசி  செலுத்தும் திட்டத்தின் வாயிலாக 4 நாட்களில் மட்டும் 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக  அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  அதேசமயம்  தடுப்பூசி  முகாம்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி அவர்களுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

vaccine

இந்த சூழலில் தமிழக முதல்வரின் ஆணைப்படி வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா  தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில்,  தமிழகத்தில்  வியாழன் கிழமையான இன்று  மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 200 வார்டுகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை 9 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து உள்ளனர். தற்போது மாநகராட்சி வசம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி, உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.