தவெகவுக்கு ஆதரவு வழங்கிய 25 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு

 
s

சட்டப்பேரவையில் கட்சியின் விதிகளை மீறி சிவி சண்முகம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினர்.

சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகு, சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது புகார் அளிக்க அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அதிமுக எம்.பி இன்பதுரை ஆகியோர் புகார் அளிக்க தலைமை செயலகம் வருகை தந்தனர். சிவி சண்முகம் தலைமையில் தவெகவுக்கு ஆதரவு வழங்கிய 25 அதிமுக எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கூறி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அதிமுக எம்பி இன்பதுரை, “அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவுக்கு மாறாக தற்போதைய அரசுக்கு ஆதரவு கூறும் தீர்மானத்தை,  அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் செய்திருக்கின்றனர். கொறடாவின் உத்தரவை  மீறி அவ்வாறு வாக்களித்தவர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சந்திக்க வேண்டி இருக்கிறது. கொறடா அரசுக்கு எதிராக எதிர்ப்பு வாக்களிக்க வேண்டும் என அனைத்து வகையிலும் மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த உத்தரவை மீறி 25 பேர் அதற்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக, கட்சித்தாவல் தடை சட்டம் பாய்ந்து நேரடியாக அவர்கள் பதவி இழக்க நேரிடும். சட்டப்பேரவை வரிகளில் 2 b படி, அவர்கள் கொடுத்திருக்கும் மனுவை நீக்கம் செய்ய வேண்டும். பேரவை தலைவரிடம் மனு கொண்டு செல்லப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் உறுதி அளித்தார்” என்றார்.