பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அதேசமயம் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்புள்ளது.
அவ்வாறு தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தபோது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராகத் தொடரவோ இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இடைக்கால உத்தரவு விதிப்பதாகவும், இல்லையென்றால் அது சரிசெய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. பொன்முடி வழக்கின் தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.03.2024 அன்று,பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். ஆளுநர் ரவி உச்சநீதிமன்றம் தீர்ப்பினை நிறுத்தித்தான் வைத்துள்ளது, இரத்து செய்யவில்லை" என உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு! தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவரை அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்தார்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிப்பதாகவும் மனுவில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டியுள்ளது. அவசர வழக்காக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.