விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு

 
ச் ச்

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க உரிய பாதுகாப்பு கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்களை தெரிவித்திருந்தாலும், விஜய் நேரில் சந்திக்கவில்லை என்பதால் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. விஜய் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலமாக சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதிக்கோரி டிஜிபி அலுவலக மெயிலுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அறிவழகன், விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மனு அளித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், தமிழக வெற்றிக் கழக தலைவர் கரூர் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதிக் கேட்டும் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாக என்ன சொல்லப்பட்டது ? எப்போது விஜய் மக்கள் சந்திக்கின்றார்? உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்துவிட்டு காரில் ஏறி சென்றதால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.