‘சிவாஜி வீட்டை ஜப்தி செய்யாதீங்க’- மகன் ஐகோர்ட்டில் கோரிக்கை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் உள்ளது. ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எப்படி ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்த்துடன், பதில்மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். செய்திகளின் மூலம் தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு என தெரிந்து கொண்டதாக தெரிவித்த நீதிபதி, பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.