தமிழக அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக தவெக ஐகோர்ட்டில் மனு..!
தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், '' தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மற்ற கட்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்குவது போல, தவெகவுக்கு அனுமதி வழங்குவது இல்லை.
ஆளும் கட்சியினர் மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் அவர்கள் விரும்பும் இடங்களில் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் ரோட் ஷோக்களை நடத்தி வருகின்றனர். தவெக கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு மட்டும் தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. சில நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாததாக இருந்தாலும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கட்சி கூட்டம் நடத்துவதற்கு எளிதான நிபந்தனைகளுடன் அனுமதி கேட்டு 2025ம் ஆண்டு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்சி கூட்டங்களின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் இழப்பீடு வசூலிக்கும் வகையில் உரிய வழிகாட்டுதல்கள் கொண்டுவர அரசுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, 2025 செப் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே கூட்டம் நடத்தும் வகையில் ஜன.5ம் தேதி வழிகாட்டுதல்கள் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கூட்டம் நடத்த முடியாத வகையில் வழிகாட்டுதல் உள்ளது.
இது, தமிழகத்தில் மற்ற கட்சிகள் கூட்டங்களை நடத்த கூடாது என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள், தன்னார்வலர்கள், தடுப்புகள், கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு துறை மற்றும் கூட்ட நேரம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகள் கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறையாகும்.
இந்த வழிகாட்டுதல்களில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என கூறுகிறது.
இந்த வழிகாட்டுதல்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக கட்சிகளை கட்டுப்படுத்தவும், கட்சிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் கடுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், வழக்கு முடியும் வரை வழிகாட்டுதல்களுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்து விட்டு, அனைத்து கட்சிக்கும் பொதுவான வழிகாட்டுதல்களை புதிதாக கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


