"கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர்" - ஓபிஎஸ் புகழாரம்!!

 
ops

 தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,  "மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அருண்தொண்டாற்றிப் பாரத மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பெற்றவரும், இளம் வயதிலிருந்தே நாட்டுச் சேவைக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும், தொண்டின் மறு உருவமாக விளங்கியவரும், 'பேச்சைக் குறை; செயலை அதிகமாக்கு' என்ற தத்துவத்தை கடைபிடித்தவரும், தன்னலமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவருமான கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் : தமிழக அரசு சார்பில் மரியாதை..

இந்திய நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, விடுதலை பெற்ற பாரதத்தின் உயர்வுக்காகவும் அயராது உழைத்தவர். இதனாலேயே, இந்தியத் திருநாட்டின் மக்களால் 'பெருந்தலைவர்' என அன்போடு அழைக்கப்பபட்டவர் கர்மவீரர் காமராசர் அவர்கள். ஒருவருக்கு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்பவர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், சான்றோர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள். தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கிறார் திருமூலர். இது உயர் கொள்கையாக மதிக்கப்படுகின்ற தமிழகத்தில், “தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்” என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக் கொண்டு வந்து தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர் கர்மவீரர் காமராசர் அவர்கள். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அமைதியான கல்விப் புரட்சியைஉருவாக்கிய பெருமைக்குரியவர் காமராசர் அவர்கள்.

ops

சாதிமத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வினை அகற்றுவதிலும், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேளாண் தொழிலை மேம்படுத்துவதிலும், தொழிற்சாலைளை உருவாக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தினைப் போக்குவதிலும் முனைப்பு காட்டி அவற்றில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள்.

காமராஜர் பிறந்த நாள்… பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை

காங்கிரஸ் இயக்கத்தில் கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து, தன் தன்னலமற்ற உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள். பெருந்தன்மை, எளிமை, வஞ்சனையற்ற உள்ளம், அஞ்சாமை ஆகிய பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள். பதவி வெறி அவரை எந்நாளும் ஆட்கொண்டதில்லை. அவர் நினைத்திருந்தால் இந்தியத் திருநாட்டின் பிரதம அமைச்சராகவே ஆகியிருக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு இருமுறை வந்தபோதும், அதனை ஏற்றுக் கொள்ளாமல், திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களையும், திருமதி இந்திரா காந்தி அவர்களையும் அந்த பதவியில் அமர வைத்த பெருமைக்குரியவர் கர்மவீரர் காமராசர் அவர்கள்.பாமரனாக வாழ்க்கையைத் தொடங்கி, தன் திறமையான தன்னலமற்ற ஆட்சியினால் 'படிக்காத மேதை' என அனைவராலும் பாராட்டப் பெற்ற ஏழைப் பங்காளர் - கர்மவீரர் காமராசர் அவர்கள் எந்நாளும் நம் இதயங்களில் வீற்றிருக்கும் தலைவராவார்.பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு அவர் ஆற்றிய பணிகளை, செய்த தியாகங்களை, மேற்கொண்ட சேவைகளை நினைவு கூர்வதோடு, அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.