ஈரோட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருப்பூரில் கைது

ஈரோட்டில் பேருந்து மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபரு ஒருவர் ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மனிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அட்டைந்த சென்னை போலீசார் உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னை போலீசார் கொடுத்த தகவலை அடுத்து உடனடியாக சம்பவ இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மணிக்கூண்டு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் உதவியுடனும் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்த நிலையில், சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எதற்காக மிரட்டல் விடுத்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் குமார் என்பவரை திருப்பூரில் வைத்து ஈரோடு போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் குமார் ஏற்கனவே இதேபோல் மிரட்டல் விடுத்த வழக்குகளில் 2 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.