தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா?.. செங்கோட்டையன் விளக்கம்..!

 
1 1

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அனுமதி கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் செங்கோட்டையன் கடிதம் வழங்கினார்.

இந்நிலையில், தவெக தேர்வு செய்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவ்வாறு பரவி வரும் செய்திகள் குறித்து தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "தவெக தலைவர் விஜய்-இன் பரப்புரைக்காக ஈரோட்டில் வாரி மஹால் அருகே அனுமதி கேட்டோம். எங்களின் கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

இது குறித்து, நாங்கள் காவல்துறையிடம் கேட்டோம். அப்படி எதுவும் மறுப்பு கடிதம் எழுதவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக டோல் கேட் அருகே மாற்று இடத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கவுள்ளோம்.

விஜய் பங்கேற்கப்போகும் கூட்டம் இந்த பகுதியில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். விஜயின் சுற்றுப் பயணம் என்பது தமிழ்நாட்டில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கும் என்றார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையா என்ற கேள்விக்கு, "அதை வரும் தேர்தலில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்" என பதில் அளித்தார் செங்கோட்டையன்