அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
கடலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி போராட்டம் நடத்த இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் போராட்டம் நடைபெறவில்லை. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவினர் அறிவித்துள்ளனர்.