மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நிரந்தர பணி நீக்கம்- டாஸ்மாக் நிர்வாகம்

 
Tasmac

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tasmac

இதுதொடர்ப்பாக கரூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைப்பணியாளர்கள்‌ மதுபானம்‌ மற்றும்‌ பீர்‌ வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்யப்பட வேண்டும்‌. கூடுதல்‌ விலை விற்பனை ஏதும்‌ செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல்‌ விலை விற்பனை ரூ.10/- கண்டறியப்படும்‌ பட்சத்தில்‌ விற்பனை செய்த கடை விற்பனையாளர்‌ நிரந்தர பணிநீக்கம்‌ செய்யப்படுவார்‌, மேலும்‌ கூடுதல்‌ விலை விற்பனை செய்வதை தடுக்கு தவறிய சம்மந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்‌ மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.  

மதுபான சில்லறை விற்பனைக்‌ கடை மேற்பார்வையாளர்கள்‌ கடையின்‌ வேலை நேரம்‌ நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை ஆஜரில்‌ இருக்க வேண்டும்‌.( விற்பனைத்‌ தொகையினை வங்கியில்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ தேவைப்பட்டியல்‌ மாவட்ட மேலாளர்‌ அலுவலகத்தில்‌ சமர்ப்பித்தல்‌ நேரம்‌ நீங்கலாக) கடையினை விட்டு வெளியே செல்லும்‌ போது நகர்வுப்‌ பதிவேட்டில்‌ உரிய காரணத்தை பதிவிட்டுச்‌ செல்ல வேண்டும்‌.

tasmac

 அனைத்து கடை மேற்பார்வையாளர்களும்‌ கடையில்‌ அதிக விற்பனையாகும்‌ நேரமான மாலை. 5.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை கண்டிப்பாக கடையில்‌ இருக்க வேண்டும்‌. அவ்வாறு கடைப்பணியில்‌ ஆஜரில்‌ இல்லாமல்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌ அந்த மேற்பார்வையாளருக்கு விளக்கம்‌ கேட்கும்‌ குறிப்பாணை வழங்கப்படும்‌. மேலும்‌ இரண்டாவது முறை கடைப்பணியில்‌ மாலை 5.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை ஆஜரில்‌ இல்லாத பட்சத்தில்‌ விற்பனை குறைவான கடைக்கு பணிமாறுதல்‌ செய்ய முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும்‌” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.