பெரியார் பல்கலை. முறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது!!

 
anbumani

பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்தவர்கள் பணிநீக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

periyar univ

இதுக்குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பா.ம.க. நீண்ட நாட்களாக சுட்டிக்காட்டி வந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

anbumani

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை இது தொடர்பாக நேற்று பிறப்பித்திருக்கும் அரசாணையில்,  சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு, அவற்றின் மீது உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சு.பழனிச்சாமி இ.ஆ.ப., இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரியார் பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டவை தான். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல புகார்களை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்திருக்கிறது. உண்மையில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் பல  மாதங்களுக்கு முன்பே விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாகவே விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது; இப்போதாவது விசாரிக்கப்படவிருப்பது மனநிறைவளிக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் மீதான முதன்மையான குற்றச்சாட்டு, உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை; நூலகர், உடற்கல்வி இயக்குனர்  நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது தான். இந்த முறைகேடுகள் நடப்பதற்கு முன்பாகவே, அவற்றை சுட்டிக்காட்டி 18.09.2022 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், துணைவேந்தரால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த இருவர் இட ஒதுக்கீட்டு விதிகளை மீறி நியமிக்கப்பட்டனர். அருந்ததியர் சமூகத்தினருக்கு கிடைத்திருக்க வேண்டிய இரு பணிகளும் துணைவேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.

govt

தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தொடர்பாக விசாரணை நடத்த இப்போது ஆணையிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்த குற்றச்சாட்டை கடந்த 24.09.2017 அன்று பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பியது. பெரியசாமி மட்டுமின்றி, அதற்கு முந்தைய  3 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 141 ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் போலிச் சான்றிதழ் மூலமாக  பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கிட்டத்தட்ட அதே காலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய அங்கமுத்து மீது ஆசிரியர்கள் நியமனத்தில் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தற்கொலை  செய்து கொண்டார். அதன் பின்னணி பற்றி  இன்று வரை முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை; உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை.
பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான பிரேம்குமார் பொய்யான புகாரின்  அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கப்பட்டது; பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த ஆண்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டது என ஏராளமான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் விசாரணை வரம்பிற்குள் சேர்க்கப்பட வேண்டும்.தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் அரசாணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள் துணை வேந்தர், துறைத் தலைவர், துணை வேந்தரின் உதவியாளர், பதிவாளர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட  முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் நினைத்தால் இந்த விசாரணையை சீர்குலைக்க முடியும்; முறைகேடுகளுக்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் அழிக்க முடியும். அவ்வாறு நடந்தால் விசாரணைக்கு ஆணையிடப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே, விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை முடிவடையும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.