தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி
தேனியில் துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 179 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 179 நபர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதியில் உள்ள ஐந்தாவது வார்டில் பணியாற்றும் குணம் என்ற பெண் துப்புரவு பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த துப்புரவு பணியாளர் தனக்கு வழங்கிய உணவை சாப்பிடாமல் அப்படியே குப்பையில் கொட்டியதாக கூறப்படுகிறது. தற்பொழுது கரப்பான் பூச்சி இருக்கும் உணவு குறித்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரியகுளம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களின் உணவு திட்டம் துவங்கப்பட்டு மூன்றாவது நாளிலேயே பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் துப்புரவு பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உணவு சமைக்கும் இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா என கேள்வி எழுந்துள்ளது.

