விஜய்யின் பவுன்சர்கள் மீது போலீசில் புகார்
மதுரை தவெக மாநாட்டில் விஜயின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக போலீசில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகாரளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். மாநாட்டில் தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய் தரக்குறைவாகப் பேசியதாகவும், பவுன்சர்கள் மனிதாபிமானம் இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை தவெக மாநாட்டில் விஜயின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக போலீசில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகாரளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் புகாரளித்துள்ளார். விஜய் நடந்துவந்த ரேம்ப் மீது ஏற முயன்ற சரத்குமாரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். விஜய்யின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரத்குமார் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் கூறுகையில், “என்னால கட்சிக்கு கெட்டப்பெயர் வந்திடக் கூடாதுன்னுதான் நான் இவ்வளவுநாள் சொல்லல; இப்போ சொல்றேன்... தவெக கூட்டத்தில் பவுன்சர்கள் தள்ளிவிட்டது என்னைதான். ஆதாரம் இருக்கு. பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்கணும்: எனக் குறிப்பிட்டுள்ளார்.


