ஹெக்டேருக்கு ரூ. 30,000 வழங்குக.. - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்..

 
pr pandiyan

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க  வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.  

இந்த ஆண்டு மயிலாடுதுறை  மற்றும் சீர்காழி பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்தப் பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இங்கு  தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் கிராமத்தில் அய்யாவையனாற்றில் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்டுள்ள  சம்பா பயிர்களை தழிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

பயிர் காப்பீடு

 விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. அதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

பயிர் காப்பீடு

காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நிலையில்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் பலன் தரும் வகையில் சட்ட திட்டங்கள் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும். 2020-21 ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று  கூறினார்.