'மக்கள் மருத்துவர்' காலமானார்..! சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி மாவட்டம்..!

 
1 1

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவ சேவை ஆற்றி வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனையில் பணியாற்றிய காலத்திலேயே, ஏழை எளிய மக்களுக்காகத் தனது சொந்த ஊரில் கிளினிக் ஒன்றைத் தொடங்கி அவர்களின் துயர் துடைத்து வந்தார். வணிக நோக்கம் ஏதுமின்றி, குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தனது மருத்துவப் பயணத்தின் தொடக்கத்தில் வெறும் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு சிகிச்சையளிக்கத் தொடங்கிய பொன்னையா, அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவராக மாறினார். அரசுப் பணியின் காரணமாகப் பல்வேறு ஊர்களுக்கு மாறுதலாகிச் சென்ற காலங்களிலும், விடுமுறை நாட்களில் சொந்த ஊர் வந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் சிகிச்சைக்காக இவரையே மலைபோல் நம்பி இருந்தனர்.

Advertisement

அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், கடந்த 30 ஆண்டுகளாகத் தனது மருத்துவச் சேவையை அவர் தொய்வின்றித் தொடர்ந்து வந்தார். வயது முதிர்ந்த காலத்திலும், கடந்த ஒரு வாரம் முன்பு வரை அவர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வந்துள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்பக் கட்டணங்கள் உயர்ந்துவிட்ட நிலையிலும், அவர் கடைசியாக வெறும் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுத் தனது சேவையைத் தொடர்ந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாகத் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பொன்னையா சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ஆறுமுகநேரி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். தனது நோயாளிகளை அன்புடனும், கனிவுடனும் நடத்தும் பண்பு கொண்ட அவர், அப்பகுதி மக்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கப்பட்டார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர்மல்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. "எங்கள் வீட்டுப் பிள்ளையாகத் திகழ்ந்த மருத்துவர் பொன்னையாவின் நினைவாக, அவர் நடத்தி வந்த கிளினிக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும்" என்பதே ஆறுமுகநேரி மக்களின் உருக்கமான கோரிக்கையாக உள்ளது.