திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அங்கீகாரம் கொடுத்த மக்கள்! தோற்றமும்... வளர்ச்சியும்!!
திராவிட முன்னேற்றக் கழகம்… சமூக நீதியை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இக்கட்சி தற்போது ஆளும் கட்சியாக நிமிர்ந்து வளர்ந்து வேரூன்றி புரவிக்கிடக்கிறது. இக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி, கடந்துவந்த பாதை ஆகியவற்றை பார்க்கலாம்.
தோற்றம்
1916 ஆம் ஆண்டு உதயமான நீதிக்கட்சியே பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது. 1916 ஆம் ஆண்டு மருத்துவர்கள் சி.நடேசன், டி.எம் நாயர், வழக்கறிஞர் பி.டி.ராஜர், சர் பிட்டி தியாகராஜன் ஆகியோரோல் சென்னையில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது. ஆனால் இக்கட்சிக்கு முன்பாகவே 1879-ல் இருந்தே தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றை நிறுவி சமூகத்திலும் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பயணித்த அண்ணாதுரை மற்றும் சில தலைவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, ஜார்ஜ் டவுன், பவளக்காரத் தெருவில் கூடி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினர். 1958 ஆம் ஆண்டு திமுக மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. திமுகவின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக இருந்தவர் அண்ணா. அவரே கட்சியின் முதல் பொதுச்செயலாளராவார். இவரே மாநில கட்சியாக இருந்த திமுகவை அரசியல் கட்சியாக மாற்றினார். அண்ணாவுக்கு கலைஞரும், நெடுஞ்செழியனும் துணைநின்றனர்.
திராவிட மாடல்
இளைஞர்களை பெருமளவு கவர்ந்த திமுக, மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மேடை பேச்சு, எழுத்து, இசை, நாடகம் ஆகியவற்றின் மூலம் மக்களிடம் நெருங்கியது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடியதால் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் திராவிட கொள்கைகள் பரவின. மேலும் திரைத்துறையில் இருந்த கலைஞரும், அண்ணாவும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் திரையிலும் சமூக நீதி கொள்கையை புகுத்தி மக்களிடம் நெருங்க ஆரம்பித்தனர். இதன்விளைவாக மக்கள் மத்தியில் அறிமுகமான திமுக 1957 ஆம் ஆண்டு முதன்முதலில் அரசியலில் களமிறங்கியது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிபுரிந்த காலத்தில், அதனை எதிர்த்து இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தார் அண்ணா. இதன்மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்ற திமுக,1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 138 இடங்களை வென்று காங்கிரசை தோற்கடித்து முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அரியணையில் ஏறவும் உதவியது.
ஆட்சியை பிடித்த திமுக
இதையடுத்து அண்ணா முதலமைச்சரானார். தமிழ் மீது தீரா பற்று கொண்ட அண்ணா, சென்னை என இருந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயரிட்டு மகிழ்வு கண்டார். மேலும் இரு மொழி கொள்கை, சுயமரியாதை திருமணங்கள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்தார். 2 ஆண்டுகள் அதாவது 1967 முதல் 1969 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணா மறைவை அடுத்து மு.கருணாநிதி திமுகவின் தலைவரானார்.
முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். 1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 184 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். மிகச்சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆகமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். மாநில சுயாட்சி, முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு பேருந்து கழகத்தை உருவாக்கினார். கிராமங்களில் சாலை திட்டம், மின்சாரம் ஆகியவற்றுக்கு அடிதளமிட்டார். குடிசை மாற்றுவாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையம், இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம், காவல்துறையில் மகளிர், பிறபடுத்தப்பட்டவர்களுக்கு 31% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதன்மூலம் தொடர்ந்து முதல்வர் பதவியையும் வசப்படுத்திக்கொண்டு ஐந்து முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தார்.
மக்களவையில் மூன்றாவது பெரியக் கட்சி
2016 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. அதன்பின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு அவரது மகன் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராகவும், பின்னர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 26 இடங்களை கைப்பற்றிய திமுக, மக்களவையில் மூன்றாவது பெரியக் கட்சியாக செயல்பட்டுவருகிறது. ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. முதல்வராக அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்