சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள்.. வாடகை ஆட்டோ, கார் கிடைக்காமல் அவதி..

 
பொதுமக்கள் தவிப்பு


சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக்  கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்ரும்  தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.  பால் விநியோகம்,  மருந்தகங்கள்,  பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை ஆட்டோ - ஊரடங்கு

 மேலும் மருத்துவத் தேவைக்கு செல்வோர் ஆம்புலன்ஸிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ செல்லலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வோர் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சொந்த வாகனங்களில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளின்றி தடையை மீறி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும்,  வெளியே வரும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஊரடங்கு - வாடகை ஆட்டோ

இருப்பினும் ஏற்கனவே முன்பதிவு செய்து ரயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.  இவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் . வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் கிடைக்காமல் பயணிகள் தங்களது வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.   பெரும்பாலான  ஆட்டோ ஓட்டுநர்கள்  சவாரிக்கு வர மறுப்பதாக பயணிகள் கூறுகின்றனர். பயணச் சீட்டுகளை காண்பித்து ஆட்டோக்களை  இயக்கினாலும்,  சவாரிகளை இறக்கி விட்டு திரும்பும் போது காவல்துறையினர் ஆவணங்கள் கேட்பதாகவும், அபராதம் விதிப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இதனாலேயே ஆட்டோக்களை இயக்குவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.