வீட்டிலிருந்தே பை கொண்டு வந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லலாம் - தமிழக அரசு அறிவிப்பு..

 
பொங்கல் டோக்கன்

பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 21 பொருட்காள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கப்படும் என அரசு அறிவித்தது.  அதன்படி சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய்,மஞ்சள்தூள், மிளகாய்தூள், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், புளி, மிளகு, ரவை, கோதுமை, உப்பு உள்ளிட்ட பொருட்களும், துணிப்பையும்  வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

 இந்நிலையில் வீட்டிலிருந்தே பை கொண்டு வந்து பொதுமக்கள் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பினை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,  ”தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதுவரை 45.1 சதவிகித அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  பொங்கல் பரிசு தொகுப்பு காண பொருட்கள் முழுமையாக இருக்கும் பட்சத்தில், சில பகுதிகளில் பைகள்  வந்து சேராததால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.   

கொரோனா தொற்றை  சமாளிப்பதற்காக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.  இந்நிலையில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பைகள் முழுமையாக கிடைக்கப் பெறாத பகுதிகளில், இந்தப்  பைகள் இல்லாமல் 20 பொருட்களை பெற்றுக்கொள்ள விரும்பும்  வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகுப்பினை  வழங்கிடவும்,  அவர்களுக்கு பைகளை பின்னர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

 இவ்வாறு பைகள் இல்லாமல் பொருட்களை வாங்க விரும்பும் பயனாளிகள் தங்கள் பைகளை கொண்டு வந்து தொகுப்பினை பெற்றுச் செல்லலாம். பைகள் இன்றி  பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர்  பொது விநியோக திட்ட பொருட்களை வாங்க வரும்போது பைகளை பெற்றுக்கொள்ளலாம்.  இதற்காக கைகள் இல்லாமல் பரிசு தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியாக டோக்கன்கள் வழங்கப்படும்.  இந்த நெறிமுறைகளை கடைப்பிடித்து பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பு விரைந்து வழங்குமாறு பொதுவிநியோகத் திட்ட அலுவலர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.