மக்களே உஷார்..! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்!

 
1

பசிபிக் கடல் மட்டத்தின் வெப்பம் காரணமாக இந்த ஆண்டில் கோடையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்றும், அதேநேரத்தில் வெப்ப சலனமும் அதிகரித்து கோடை மழையும் கொட்டித் தீர்க்கும் என்றும்  வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நேற்று சுட்டெரித்தது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை இருக்கா? இல்லையா?  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

மார்ச் 08 மற்றும் 09ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 10ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11 மற்றும் 12ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் மார்ச் 10ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.