மக்களே உஷார்..! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

 
1

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.குறிப்பாக, ஈரோடு, நாமக்கல், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வெப்பநிலைக்கான மஞ்சள் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் பிற்பகல் 12:00 மணி முதல் 03.00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படின், குடை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளையும், காட்டன் துணிகளையும் உடுத்திக் கொண்டே வெளியில் செல்லுமாறும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று பதிவான வெப்பநிலையின் அடிப்படையில், நாட்டில் அதிக வெப்பநிலை பதிவான மூன்றாவது இடத்தை ஈரோடு பெற்றுள்ளது. இதன்படி, 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் ஈரோட்டில் பதிவாகியுள்ளது.

மேலும், கோடை காலம் வாட்டி வதைக்கும் நிலையில், எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, டீ, காபி உள்ளிட்ட பானங்களை தவிர்த்து, குளிர்ச்சியான பானங்கள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை பெரும்பாலும் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.