மக்கள் அதிர்ச்சி..! காவல் துறையின் இணையதளம் முடக்கம்..! டார்க் வெப்பில் விற்பனையா?

 
1

தமிழ்நாடு போலீஸார் குற்றவாளிகளின் தரவு, புகார் குறித்த தகவல்களை சேமித்து வைக்க என ஒவ்வொன்றுக்கும் தனியாக மென்பொருள்களை கையாளுகின்றனர். அந்த வகையில் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களின் தரவுகள் அனைத்தும், எஃப்.ஆர்.எஸ். (ஃபேஸ்ரெகக்னிஷன் போர்ட்டல்) எனப்படும் முக அடையாள மென்பொருள் இணையதளத்தில் தமிழக காவல் துறையால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த முக அடையாளம் காணும் மென்பொருளானது, ஒரு தனிநபரின் புகைப்படத்தை காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் காணப் பயன்படுகிறது. மேலும், இதனை எஃப்ஆர்எஸ் செயலியாகவும், போலீஸார் செல்போனில் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த இணையதளம், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியாக உள்ளது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் முக அடையாளம் காணும் இந்த இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எஃப்ஆர்எஸ் மென்பொருள் சிடாக் கொல்கத்தா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருள் தமிழகம் முழுவதும் 46,112 பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மார்ச் 13-ம் தேதி தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையால் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், எஃப்ஆர்எஸ் இணையதளத்தில் விதிமீறல் இருப்பதாக ஒரு முகவரியில் இருந்து தகவல் வந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அட்மின் அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த அட்மின் அக்கவுன்ட்டில், பயனர்களுக்கான ஐ.டி.யை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட விவரங்களை மட்டுமே பார்க்க முடியும்.

இது சம்பந்தமாக, எல்காட், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை, சிடாக் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.