மக்கள் ஷாக்..! இந்தியன் ரயில்வே சரக்கு சேவை கட்டணம் திடீர் உயர்வு..!
தொழிற்சாலை மற்றும் குடோன்களில் இருந்து சரக்கு ரயில்களில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் நடவடிக்கை ரயிலை நிறுத்தும், பாதை மாற்றும் கட்டணங்களை ரயில்வே துறை ஒரு மணி நேர அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் வசூலித்து வருகிறது.
2019ம் ஆண்டில் இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் அந்த கட்டணங்களை ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை கடந்த ஜூலை 14ம் தேதி ரயில்வே வாரியத்தால் மண்டல பொதுமேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்ஜின்களின் செயல்பாட்டு செலவுகள் கடந்த காலங்களில் தொடர்ந்து அதிகரித்திருப்பது இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள், பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்களுக்கு ஏற்படும் செலவுகள் இவ்வளவு உயர்வுக்கு காரணமாகும்.
புதிய கட்டண உயர்வு நேரடியாக பயணிகளை பாதிக்காது என்ற போதிலும், சில வணிக பொருட்களின் விலையேற்றத்தில் அதன் தாக்கம் காணப்படலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஜூலை 1 ம் தேதி பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய நிலையில், இப்போது சரக்கு சேவைக்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


