மக்கள் அதிர்ச்சி..! பூங்காக்களின் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு..!

 
1

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நகரின் மையப் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையன்ட் பூங்காவும், அப்சர்வேட்டரி பகுதியில் ரோஜா பூங்காவும் அமைந்துள்ளன. இந்த பூங்காக்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மலர்கள், பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதைப் பார்த்து ரசிக்க விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் இரண்டு பூங்காக்களிலும் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரியர்வர்களுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆகவும் சிறியவர்களுக்கு (வயது 3 -10) ரூ.15-ல் இருந்து ரூ.25-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதன் முறையாக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு ரூ.25 என நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செட்டியார் பூங்கா நுழைவு கட்டணமானது பெரியர்வர்களுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆகவும் சிறியவர்களுக்கு (வயது 3 -10) ரூ.15-ல் இருந்து ரூ.20-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்களுக்கான நுழைவுக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் வழக்கமாக கொடைக்கானல் வந்துபோகும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், கொடைக்கானலில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் இந்தக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.