ஓய்வூதிய திட்டம் - விரிவாக ஆராய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் அரசுகள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் மறுத்துவருகின்றன.
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்குழு விரிவான அறிக்கையும் பரிந்துரைகளையும் தமிழ்நாடு அரசுக்கு 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.