“பிரதமர் மோடி இந்த காலத்து நடிகர் திலகம்”- ப.சிதம்பரம்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அக்கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். குறிப்பாக இதில் எஸ்ஐஆர் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி உள்ளது மிகப் பெரிய பாதிப்பு. இது மிகப்பெரிய பாதக செயல். மகாத்மா காந்தி படுகொலைக்கு ஈடான படுகொலை 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியது. இரண்டாவது முறையாக காந்தியை கொலை செய்துள்ளனர். இது நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டம் அல்ல. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டத்தில் நாடு முழுவதும் பணி நடக்கும். ஆனால் தற்போது எந்த மாநிலத்தில் ஒன்றிய அரசு பணி சொல்கிறதோ அந்த இடத்தில் மட்டும் தான் பணி செய்ய வைக்கின்றனர். நாங்கள் அறிவித்த திட்டத்தில் வேலை கேட்டால் வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுக்கவில்லை என்றால் வேலையின்மை படி கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது வேலை கொடுத்தால் தான் வேலை கேட்க வேண்டும்.
நாங்கள் அறிவித்த திட்டத்தில் ஒன்றிய அரசு முழு ஊதியத்திற்கும் பொறுப்பு. பொருள்களில் 90% ஒன்றிய அரசு பொறுப்பு. 10% தான் மாநில அரசு பொறுப்பு. இப்ப அப்படி இல்லை. மொத்த செலவில் 60 சதவீதம் தான் ஒன்றிய அரசு பொறுப்பு. 40% மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசே ஏற்கனவே பணம் தட்டுப்பாடு வருவாய் தட்டுப்பாடு கடன் வாங்குகிறார்கள் ஒன்றிய அரசுடைய ஒப்புதலோடு கடன் வாங்குகிறார்கள். 40% மாநில அரசு பொறுப்பு என்றால் எத்தனை மாநிலங்கள் இதை செய்வார்கள். இப்படி செய்வதால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் முதலில் நான்கு மாவட்டங்களில் செயல்படுத்துவார்கள் பிறகு ஆண்டு முழுவதும் இந்த வேலையை அறிவிக்காமல் இரண்டு மாதத்திற்கு அறிவியுங்கள் என்று சொல்வார்கள். மாநில அரசு மிகப்பெரிய நிதிச் சுமையை சுமக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் இந்த திட்டம் நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு நேர் எதிரானது. இதற்கு கேரண்டியே கிடையாது நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு கேரண்டி உத்தரவாதம் இருந்தது. இப்போது இந்த திட்டத்திற்கு யார் கேரண்டி ஒன்றிய அரசுக்கும் கேரண்டி கிடையாது. மாநில அரசுக்கும் கேரண்டி கிடையாது. இது நாங்கள் அறிவித்த மகாத்மா காந்தி பெயரால் அறிவித்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைத்து புதைத்து விட்டனர். இது இவர்களின் சொந்த திட்டம். அந்தத் திட்டத்தில் வாய்க்குள் நுழையாத பெயர். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்றால் அனைவருக்கும் புரியும். அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தால் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் தான். இப்ப இந்தத் திட்டத்தின் பெயர் விபிஜிராம்ஜி என்று வைத்துள்ளனர். அதில் ராம் இருக்கு என்று நினைக்க வேண்டாம். ராமில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இது அவர்களுக்கே புரியாது. நன்றி சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ஹிந்தி பேசுகின்ற இந்தி மட்டும் தெரிந்த எம்பி இதை படித்தார்கள் என்றால் அவர்கள் படிக்கவே முடியாது. ஹிந்தி அல்லாத எம்பிக்கள் இந்திய அல்லாத மக்கள் இதை படிக்கலாம் ஆனால் புரியாது. விபிஜி ராம்ஜி என்றால் யாருக்காவது புரியுதா எனக்கு தெரியாது.
ஒரு பக்கம் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு பக்கம் 11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இது என்ன வேடிக்கை. நல்ல வேலை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது காலத்தில் நடித்து நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான். அமித்ஷா பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவர் நாங்கள் தோற்போம் என்றா கூறுவார். விஜய் பற்றி எல்லாம் என்னிடம் கருத்து கேட்காதீர்கள். நாங்கள் எங்கள் தலைமையின் அறிவிப்பு படி திமுக கூட்டணியில் இருக்கின்றோம். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைத்துள்ளது அந்த குழு பேசிய பிறகு அறிக்கை தந்த பிறகு இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.


