புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே நீடித்து வரும் இழுபறி... சமரசம் செய்ய களமிறங்கிய ப.சிதம்பரம்

 
x

புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் ப.சிதம்பரமும் முதல்வரை சந்தித்தார்

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 9ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு தொகுதி பங்கீடுகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இன்னும் சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பபட வேண்டும். ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை ஒரு வாரமாக நடந்தும், இதுவரை தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் 17 இடங்களை எடுத்து  கொண்டு திமுகவுக்கு 13 இடங்களை ஒதுக்கி அதில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட்டு தலா ஒரு தொகுதி கொடுக்கும்படி கூறியது. ஆனால் 30 தொகுதிகளை சமமாக பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுக்க திமுக வலியுறுத்திவருகிறது. காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்கு தலைமை வகிப்பதால், கேட்கும் தொகுதிகளை  தர வேண்டும் என கூறியதால், உடன்பாடு ஏற்படவில்லை.


புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் ப.சிதம்பரமும் முதல்வரை சந்தித்தார். புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே நீடித்து வரும் இழுபறி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்த நிலையிலும், ப.சிதம்பரமே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.