மு.க.ஸ்டாலின் தன்னை வந்து சந்தித்தது மகிச்சியையும், ஆறுதலையும் அளிக்கிறது: பழ.நெடுமாறன்

தமிழ்நாடு முதலமைச்சர் உடல் நலம் குன்றியுள்ள தன்னை வந்து சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியும் ஆறுதலையும் அளிக்கின்றது, ஸ்டாலின் என் மீது எப்போதும் மதிப்பும் அன்பும் கொண்டவர் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திரு.பழ.நெடுமாறன் அவர்களின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள பழ.நெடுமாறன், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு வேலை பளு உள்ள சூழலில் நான் உடல் நலம் குன்றியுள்ளதை கேள்விப்பட்டு என்னை இல்லம் வந்து சந்தித்தார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.கடந்த 2002 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது, வேறு ஒரு போராட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் கைது செய்யப்பட்டு அதே சிறைக்கு கொண்டு வந்து அடைத்தார்கள். ஒரே பிளாக்கில் நாங்கள் இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி தந்தனர். கிட்டத்தட்ட 15 நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்பொழுது அவரிடம் பல உரையாடல்களை செய்திருக்கின்றேன்.
ஸ்டாலின் என் மீது அன்பும் மதிப்பும் காட்டி வந்தவர். இந்த சூழலில் அவரும் சக அமைச்சருடன் என்னை வந்து சந்தித்தது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இது என்றும் மறக்க முடியாதவை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.