NDA கூட்டணிக்கு வருமாறு விஜய்யுடன் பேச்சுவார்த்தையா?- பவன் கல்யாண் விளக்கம்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு விஜய் உடன் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் நடைபெற்ற 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு விஜய் உடன் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. விஜய்க்கு என்னோட வாழ்த்துகள்... யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது...மக்கள் ஆதரவு கிடைத்தால் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழிசை, நயினார் நாகேந்திரன் அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன். தமிழ்நாட்டை நான் விட்டாலும், தமிழ்நாடு என்னை விடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரே நாடு ஒரே தேர்தலை கருணாநிதி ஆதரித்தார். ஸ்டாலின் எதிர்க்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தலை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக கலைஞர் கருணாநிதி பார்க்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் வாதிடுகின்றன. இது உண்மையெனில், மாநில உரிமைகளுக்காகப் போராடியவராக கலைஞர் கருணாநிதி எதற்காக ஆதரித்தார்? அவர்கள் வெற்றி பெற்றால் EVM சூப்பர்... நாங்கள் வெற்றி பெற்றால் EVM-ல் சூடு” என்றார்.


