‘இருளர்கள் என்றால் இளிச்சவாயனா... ஒழுங்கா சிகிச்சை இல்லை’ மா.சு.விடம் வாக்குவாதம்

 
மாசு

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட உறவினர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சூழ்ந்து கொண்டு சண்டையிட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 5 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களிச் குறைகளை கேட்டு அறிந்தார். 

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வெளியே வந்த பொழுது, கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும், சங்கர் என்பவரின் உறவினர்கள் சிலர் அமைச்சரை சூழ்ந்து கொண்டு அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். அப்போது, ‘இருளர்கள் என்றால் இளிச்சவாயனா...  ஏழைக்கு முறையாக சிகிச்சை வழங்கவில்லை’ என குற்றச்சாட்டை முன் வைத்தனர். தொடர்ந்து முறையாக சிகிச்சை அளிக்காமல் பதிலும் சொல்லாமல் மருத்துவர்கள் அலைகழித்து வருவதாகவும், எங்களிடம் அவர் உடலைக் கொடுத்து அனுப்பி விடுங்கள் என கடுமையான வார்த்தைகளால் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Image

இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்ற அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எடுத்து கூறினார். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.