இந்தோனேசியாவில் மினிபஸ் மீது பயணிகள் ரயில் மோதி தீ விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு; 3 ரயில்வே ஊழியர்கள் காயம்!

 
1

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் பாதுகாப்பற்ற ரயில்வே கிராசிங்கைக் கடக்க முயன்ற மினிபஸ் மீது ரயில் மோதி தீப்பிடித்ததில், மினிபஸ் ஓட்டுநர் உயிரிழந்தார் மற்றும் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். 

வடக்கு சுமத்ராவின் சிமலுங்கன் (Simalungun) பகுதியில் உள்ள சியாந்தர் (Siantar) மற்றும் டோலோக் மெரங்கிர் (Dolok Merangir) ரயில் நிலையங்களுக்கு இடையே பாதுகாப்பற்ற ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பெமடாங் சியாந்தரில் (Pematang Siantar) இருந்து மேடான் (Medan) நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சியாந்தர் எக்ஸ்பிரஸ்' (Siantar Ekspres) பயணிகள் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற உள்ளூர் மினிபஸ் (Angkot) மீது மோதியது

மோதலின் வேகத்தில் மினிபஸ் மற்றும் ரயிலின் இன்ஜின் (Locomotive) ஆகிய இரண்டும் தீப்பிடித்து எரிந்தன. இதில் மினிபஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது மினிபஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லை.

ரயில் இன்ஜினில் இருந்த இரண்டு ரயில் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப ஊழியர் என மொத்தம் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், ரயிலில் பயணம் செய்த 264 பயணிகளும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தோனேசிய ரயில்வே நிர்வாகம் (PT KAI) உறுதிப்படுத்தியுள்ளது.