‘ஊரோரம் புளியமரம்’ பாடலை பாடிய லட்சுமி அம்மாள் திடீர் மரணம்
பருத்திவீரன் திரைப்படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் "ஊரோரம் புளியமரம்" என்ற பாடலை பாடி நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 75 வயதாகும் லட்சுமி அம்மாளுக்கு பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு திரைத்துறையில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஏராளமான கிராமிய பாடல்களை பாடி கிராமிய பாடல்களுக்கு தொடர்ந்து உயிரோட்டம் கொடுத்து வந்தார். இதையடுத்து இவருக்கு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருதும், தேசிய தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த இவர், தென் மாவட்டங்களில் அதிக புகழுடன் கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வந்தார். இருதய கோளாறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பாடகி லட்சுமி அம்மாள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். பொருளாதார ரீதியில் கடும் சிரமத்தை சந்தித்து வந்த லட்சுமி அம்மாளின் மருத்துவ உதவிக்கு நடிகர் கார்த்தி மாதம் தோறும் உதவித் தொகையும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். லட்சுமி அம்மாளின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரது மறைவிற்கு திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை காரியாபட்டியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


