ரயிலில் பிறந்த குழந்தைக்கு ரயிலின் பெயர் சூட்டிய பெற்றோர்..!

 
1

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை காலை மும்பை-வாரணாசி இடையேயான காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் 24 வயதான நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். போபால் ரயில் நிலையத்தை தாண்டியவுடன் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரயிலை நிறுத்த முடியாது என்பதால், உடன் பயணித்த இரண்டு பெண் பயணிகள் அவருக்கு உதவ முன் வந்தனர்.

இதையடுத்து ரயிலிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து விதிஷா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் அங்கு ஏற்கெனவே தயாராக இருந்த ரயில்வே போலீஸாரும், மருத்துவக் குழுவினரும் தாய், சேய் இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரயிலில் பிறந்த குழந்தைக்கு, அந்த ரயிலின் பெயரையே சூட்ட பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி பெண் குழந்தைக்கு காமயானி என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.