கடற்கரையில் ரீல்ஸ் எடுத்த பெற்றோர்- அலையில் சிக்கிய குழந்தையை மீட்ட இளைஞர்
கடற்கரையில் குழந்தையைக் கவனிக்காமல் பெற்றோர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை அருகில் இருந்த நபர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கடற்கரையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த பெற்றோர், கடல் அலையில் சிக்கிய தங்களது குழந்தையைக் கவனிக்கத் தவறியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரையில் ஒரு தம்பதியினர் காணொளி பதிவு செய்துகொண்டிருந்தபோது, அவர்களது சிறு குழந்தை கடல் அலைகளுக்கு அருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் காணொளியில், அந்தப் பெண் குழந்தையின் கைகளை பெற்றோர் பிடிக்காமல் கீழே விட்டுள்ளனர். குழந்தை அலைகளால் பாதிக்கப்பட்டபோதும், பெற்றோர் அதைக் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர், குழந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உடனடியாகச் சென்று குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தார். அப்போதுகூட சிறுமியின் பெற்றோர் எந்த பதட்டமும் இல்லாமல் ரீல்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய பெற்றோருக்கு எதிராகப் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்தும்போது, குழந்தைகளின் பாதுகாப்பை அவர்கள் மறந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பவம் நடந்த இடம், குழந்தையின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. கடற்கரைக்கு குழந்தைகளுடன் செல்லும்போது, குறிப்பாகக் கடல் அலைகளுக்கு அருகில் இருக்கும்போது, பெற்றோர் அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். சமூக வலைதளப் பதிவுகளைவிட குழந்தைகளின் பாதுகாப்புக்கே முதலிடம் அளிக்க வேண்டும். குழந்தையைக் கவனிக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டிய பெற்றோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

