"ஏரிக்கரையிலேயே கதறி அழுத பெற்றோர்!" – புழல் ஏரியில் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம்!

 
11

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அகில் ராம் (வயது 14), தருண் ஆகாஷ் (வயது 14) ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தங்கள் நண்பர்களுடன் அம்பத்தூரை அடுத்த முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரிக்கு நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அகில் ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர், நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வெகுநேரமாகியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மீட்புக் குழுவினர் திரும்பிச் சென்றனர். இருப்பினும், சிறுவர்களின் பெற்றோர், ஏரிக்கரையிலேயே நின்று அழுது கொண்டிருந்தனர்.இதையடுத்து, இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தீவிரப்படுத்தபட்டது. மெரினா சிறப்பு மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். நீச்சல் வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடனும், தெர்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட அதிநவீன உபகரணங்களைக் கொண்டும் இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இந்தத் தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில், மாயமான இரண்டு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற சோகமான தகவல் உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த இரண்டு மாணவர்களில் அகில் ராமின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

மற்றொரு மாணவரான தருண் ஆகாஷின் உடலை மீட்கும் பணியில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் படித்து வந்த நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவமும், மகன்களை இழந்து ஏரிக்கரையில் அவர்களின் பெற்றோர் கதறி அழுத காட்சியும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.