"பெற்றோர்களே உஷார்!" – விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை நைஸாக கடத்தி சென்று சித்ரவதை செய்த நபர்!

 
1

சென்னை காசிமேடு பகுதியில் 12 வயதுடைய 3 சிறுவர்களை பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற விக்ரம் என்ற இளைஞர், அவர்களுக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிகரெட்டால் சிறுவர்களின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி, விக்ரம் என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் 3 பேர், நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். திடீரென 3 சிறுவர்களும் மாயமானார்கள். இதனால் பதற்றமடைந்த சிறுவர்களின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (வயது 38) என்பவர் தீபாவளிக்கு பட்டாசு மற்றும் புதிய கைகடிகாரம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி 3 சிறுவர்களையும் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு சிறுவர்கள் குறித்து குடும்பத்தினர் விசாரித்தனர்.

அப்போது விக்ரம், 3 சிறுவர்களையும் ராயபுரம் பகுதியில் ஆட்டோவில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவர்களை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து சென்று என்ன நடந்தது? என்று விசாரித்தனர்.

அப்போது சிறுவர்கள் தெரிவித்த தகவல்களை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுவர்கள் கூறியதாவது-

விக்ரம் எங்களை சென்டிரல் பகுதியில் உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு எங்களது கைகளால் அவரை குளிப்பாட்டி, மசாஜ் செய்யும்படி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தினார். மதுவை எங்கள் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியும், தொடர்ந்து சிகரெட்டை புகைக்கும்படியும் வற்புறுத்தினார். அப்படி புகைக்க மறுத்ததால் சிகரெட்டால் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுவர்கள் கூறிய இந்த தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காசிமேடு பகுதியில் பதுங்கியிருந்த விக்ரமை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.