தவெக அரசின் அதிரடி - ’பரச்சேரி’ என்ற ஊரின் பெயர் ‘வடக்கு அச்சம்தவிழ்த்தான்’ என மாற்றம்
பட்டியிலின மக்கள் வசிக்கும் பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும் என தவெக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதி சாதிய அடையாளத்தோடு பரச்சேரி என அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை நீக்கக்கோரி அம்மக்கள் பல ஆண்டுகள் கடுமையாக போராடி வந்தனர். ஆனாலும், இதுவரை அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. இறுதியாக, அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த 150 நாட்களுக்குள்ளே அந்த ஊர் பெயரை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல ஆண்டுகால கோரிக்கையான "பரச்சேரி" என்ற கிராமத்தின் பெயர் "வடக்கு அச்சம்தவிர்த்தான்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பரச்சேரி எனும் பெயரை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கி, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என பெயர் சூட்ட, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். இனி பட்டியலின மக்கள் வாழும் பகுதி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என அழைக்கப்பட இருக்கிறது. இது அந்த மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

