தந்தைப் பெரியாரின் 144-வது பிறந்த நாள் “சமூக நீதி நாள்”

 
tn

தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்த நாளினை முன்னிட்டு, 17.09.2022 அன்று காலை 9.00 மணியளவில், அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார்.

ttn
1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டமைக்கு எதிராகப் போராடி "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது. பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர் தந்தை பெரியார் அவர்கள். சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு வழிகாட்டி, தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும்பங்காற்றினார்.

stalin

படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெறமுடியும் என்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு, குடியரசு வார இதழைத் தொடங்கினார். சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர் தந்தை பெரியார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சுய மரியாதைக்கு உரிமை உடையவர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். தமிழினத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டு, சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய அடிப்படைக் கொள்கைகளால், இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார் தந்தை பெரியார். தனது 18ஆம் வயதில் தொடங்கிய அவரது பொது வாழ்க்கையானது, தனது இறுதி மூச்சுவரை தொடர்ந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த வீடும் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

yn

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.