252 முறை தோல்வி, ஒரு கோடிக்கு மேல் இழப்பு- விடாமல் வேட்பு மனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

 
252 முறை தோல்வி, ஒரு கோடிக்கு மேல் இழப்பு- விடாமல் வேட்பு மனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’ 

மேட்டூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் மன்னன் டாக்டர் கே பத்மராஜன் 253-வது முறையாக மனு தாக்கல் செய்தார்

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன், (65) இவர் அதே ஊரில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.இவர், 1988 முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் மனு தாக்கல் செய்து வருகிறார்.இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். 

இதுவரை கருணாநிதி,ஜெயலலிதா,வாஜ்பாய்,நரேந்திர மோடி,பிரியங்கா காந்தி,ராகுல் காந்தி,ஸ்டாலின்,எடப்பாடி பழனிச்சாமி,உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் மன்னன் பத்மராஜன் 253 -வது முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் இடம் மேட்டூர் கோட்டச்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதுவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் சுமார் ஒரு கோடிக்கு மேலாக டெபாசிட் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.