மழையால் நெல்மூட்டைகள் சேதம் - முதல்வருக்கு ஓபிஎஸ் வைக்கும் முக்கிய கோரிக்கை!!

 
ops

திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய மாநில அரசுக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கவும் கிடங்குகளை விரைந்து கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில் குவியல் குவியலாக திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் கடும் மழையில் நனைந்து சேதமடைந்தன. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக கும்பகோணம் அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக நேற்று அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளிவந்துள்ளது.  இது ஒரு தொடர்கதையாக இருக்கிறது.

ttn

 இந்திய வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே அறிந்த நிலையில்,  அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலோ , அல்லது தார்பாய் போட்டு மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாலோ  இந்த சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.  உடனடி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக,  விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ttn

இனிவரும் காலங்களிலாவது நடவடிக்கை எடுத்து பிற பகுதிகளில் சேமிக்கப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்தி திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை, மத்திய ,மாநில அரசுகளுக்கு சொந்தமான கிடங்குகளில் அல்லது அரசு கட்டடங்களில் பாதுகாப்பாக வைக்கவும், கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.