பால் கொள்முதலுக்கு ஒழுங்குமுறை வாரியம், கண்காணிப்புக் குழு வேண்டும் - முகவர்கள் சங்கம் கோரிக்கை...

 
பால்

தேசிய பால் தினத்தையொட்டி, பால் கொள்முதல் ஒழுங்குமுறை ஆணையம், பால்வளத்துறை நலவாரியம்  மற்றும் கண்காணிப்புக்குழு அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ குடிநீர், மருத்துவம் இவற்றுக்கு அடுத்தபடியாக உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் சுமார்  188மில்லியன் டன் உற்பத்தி செய்து, அதன் மூலம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்து தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா திகழ வெண்மைப் புரட்சியை உருவாக்கிய "வெண்மைப் புரட்சியின் தந்தை" டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26ம் தேதி தேசிய பால் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்நாளில் அத்துறை சார்ந்தோருக்கு நல் வாழ்த்துகளையும்,  தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்  சார்பில் முன் வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

2

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.25கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் சூழலில் தமிழக தேவையில் 16% மட்டும் பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கு மட்டுமே அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் 84% தேவையை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை காலங்காலமாக அரசு கண்டு கொள்வதில்லை.

இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்திக்கான செலவினங்களைக் கூட ஈடுசெய்ய முடியாமல் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படும் விலை அளவுக்கு கூட தங்களது பாலுக்குரிய விலை கிடைக்காமல் அல்லல்பட்டு வருவதோடு, நுகர்வோராகிய பொதுமக்களும் ஆவின் பாலினை விட ஒரு லிட்டருக்கு சுமார் 14.00ரூபாய் வரை அதிக விலை கொடுத்து வாங்கி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்திலை மாறிட ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்வதைப் போன்று தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாய பெருமக்களின் நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

ஆவின் நிறுவனத்திற்கு தமிழகத்தில் சுமார் 19லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் தொகை சுமார் 500கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை இருக்கிறது. அதனால் பால் உற்பத்தியாளர்கள் பெருத்த இன்னலுக்கு உள்ளாகி வருவதால் பால் கொள்முதலுக்கான தொகையை  நிலுவையில்லாமல் பட்டுவாடா செய்யப்படுவதோடு, விவசாய பெருமக்களுக்கு மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்கிட அரசு ஆவண செய்திட வேண்டும்.

பொன்னுசாமி

ஆண்டு முழுவதும் "ஓய்வின்றி உழைப்பு", குறைந்த வருவாயால் உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாமை, மக்கள் உறங்கும் நேரத்தில் கண் விழித்து பணியாற்றுகின்ற காரணத்தால் போதிய உறக்கமின்மை, அதனால் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் மட்டுமின்றி கனமழையால் ஏற்படும் பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தங்களின் உயிரையும் பணயம் வைத்து பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கி பால் விநியோகம்  செய்யும் லட்சக்கணக்கான பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரது நலன் காக்க தாமதமின்றி "பால்வளத்துறை நலவாரியம்" அமைத்து அத்துறை சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருளாக விளங்கும் பாலினை அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் தினசரி 200மிலி காய்ச்சிய பால் இலவசமாக வழங்கிட ஆவண செய்திட வேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வது, தரக்குறைவான பாலினை விற்பனை செய்வது போன்ற அவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களுக்கு பால் கலப்படம் இன்றியும், தரமானதாகவும், தங்குதடையின்றியும் கிடைப்பதை  உறுதி செய்யவும் உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, நுகர்வோர் தரப்பு அடங்கிய அதிரடி கண்காணிப்புக்குழு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய பால் தினத்தில் தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.