தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு- பா.ரஞ்சித்
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்தனர். சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்களுடன் நேற்று முன்தினம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடந்தினர். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. காவல்துறை எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக…
— pa.ranjith (@beemji) October 9, 2024
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


