“ஓய்வூதியத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு”- ப.சிதம்பரம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அமைச்சர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


