வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதே பாஜக தான் - ப.சிதம்பரம்

 
P chidambaram

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதே பாஜக தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 01ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தானா தெருவில் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக ஆளுகின்ற வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆந்த மாநிலங்களை விட்டு அவர்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது. வட மாநில தொழிலாளர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் செல்ல உரிமை உண்டு. அவர்கள் தமிழகத்திற்கும் வர முழு சுதந்திரம் உண்டு.

தமிழர்களுக்கும்,  தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி பாஜக. மக்கள் அந்த கட்சியிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பிரதமரை மதிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அக்கட்சியின் மாநில தலைவரை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களின் கொள்கைக்கு எதிரான பாஜக-விற்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் இருப்பது வரவேற்கத்தக்கது. இந்திய பொருளாதாரம் 2வது காலாண்டிலும் 3வது காலாண்டிலும் சரிவை சந்தித்து இருக்கிறது. 4வது காலாண்டிலும் பின்னடைவை சந்திக்க உள்ளது. பெருமுதலாளிகளுடன் பாஜக அரசுக்கு உடன்பாடு உள்ளது. பாஜக சில முதலாளிகள் செழித்து வளர உதவுவதற்காக ஆட்சிக்கு வந்த கட்சி. நாட்டில் உள்ள 70 கோடி ஏழைகளை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. இவ்வாறு கூறினார்.