சொந்த வீடு, மின் இணைப்பு, AI & ஊடகப் பயிற்சி! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி நலத்திட்டங்கள்!

 
1

2026-27-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் சமூக நீதித் துறை, பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 27) சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில், நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்டெடுப்பதற்கான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். இதனைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை சார்பில் 67 அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார். அதில் முக்கியமானவை வருமாறு:

விடுதி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு

தரமான, சத்தான உணவு வழங்க பள்ளி விடுதி மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணம், ரூ. 1400-ல் இருந்து ரூ. 1800 ஆகவும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ. 1,500-ல் இருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

”உறையுள்” பழங்குடியினர் குடியிருப்பு திட்டம்

வீடற்ற பழங்குடியினருக்கு 2,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் "உறையுள்" பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

"இனிய இல்லம்" குடியிருப்புத் திட்டம்

வீடற்ற ஆதி திராவிடர் குடும்பங்கள், தகுதியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம்

மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கென மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் (MBC Welfare Board) நடப்பாண்டில் ரூ.3 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்படும்.

அகம் திட்டம் - தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு

தூய்மைப் பணியாளர்கள்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, பாதுகாப்பான குடியிருப்பை உறுதி செய்யும் வகையில், வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க "அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

சரிநிகர் - சம வேலை வாய்ப்பு திட்டம்

தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை அதிகளவில் பணியாளர்களாக பணி அமர்த்தும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் "சரிநிகர்" சம வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

பூம்பொழில் - தங்கும் வசதிகள்

மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த "பூம்பொழில் தங்கும் வசதிகள்" ஏற்படுத்தப்படும். உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்

புவிசார் குறியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களின் தனித்தன்மையை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறகுகள் - பல்திறன் குழுக்கள்

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கரின் கவனச்சிதறலை தவிர்க்கவும், விளையாட்டு மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து விடுதிகளிலும் "சிறகுகள்" பல்திறன் குழுக்கள் உருவாக்கப்படும்.

150 சமூக நீதி விடுதிகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூ. 160 கோடியில் கட்டப்படும்.

ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை ஊடகத் துறையில் ஊக்குவித்து, அவர்களின் திறன்களையும் பங்கேற்பையும் மேம்படுத்தும் வகையில், ஊடகத்துறை படிப்புகளான இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பயிலும் மாணாக்கருக்கு உட்பயிற்சி (Internship) உதவித்தொகை வழங்கும் "ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.

100 புதிய வகுப்பறைகள்

சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு ரூ.30 கோடியில் 100 புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.

சமத்துவ வீட்டு மனைத் திட்டம்

சொந்தமாக வீட்டுமனை அற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வீட்டு மனை வழங்கும் "சமத்துவ வீட்டு மனைத் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.

முல்லை - மதிப்பு கூட்டல் அலகுகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் அறுவடை செய்யும் விவசாயப் பொருட்கள் மற்றும் சேகரிக்கும் சிறுவனப் பொருட்களை மதிப்பு கூட்டுதல் மேற்கொள்ள 25 மதிப்பு கூட்டல் அலகுகள் (Value Addition Units) ரூ.12.50 கோடி மதிப்பில் நிறுவப்படும். பழங்குடியின விளை பொருட்கள் 'முல்லை' என்ற தனித்த அடையாளத்துடன் (Brand) சந்தைப் படுத்தப்படும்.

சென்னையில் "டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம்"

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கரின் கல்வித் திறன், டிஜிட்டல் அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை நந்தனத்தில் "டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம்" (Digital Learning & Innovation Centre) உருவாக்கப்படும்.

தடம் - பழங்குடியினர் மரபு நடை (TN Tribal Trails – Thadam)

பழங்குடியின மக்களின் கலாச்சாரம் பண்பாடு, மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, "தடம்" பழங்குடியினர் மரபு நடை எனும் கலாச்சார பயண நிகழ்ச்சியை ஐந்து மாவட்டங்களில் புதிதாக ஏற்படுத்துவதன் மூலம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

அம்பேத்கர் படிப்பகம்

மாணாக்கர் தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் "அம்பேத்கர் படிப்பகம்" ஏற்படுத்தப்படும். இதன் மூலம், விடுதி மாணாக்கரிடையே வாசிப்புப் பழக்கம், அறிவுத் தேடல், சுயகற்றல் மற்றும் அறிவாற்றலை வளர்த்து, கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கான கற்றல் சூழல் உருவாக்கப்படும்.

சமூக நீதி விடுதி பராமரிப்பு தொகை உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு தொகை ரூ. 50,000-லிருந்து ரூ.75,000-ஆகவும், கல்லூரி விடுதி பராமரிப்பு தொகை ரூ. 50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

"ஏற்றம்" தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்

தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு "ஏற்றம்" -தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டம், ரூ.50 கோடி கோடியில் நடைமுறைப்படுத்தப்படும்.

பழங்குடியினர் மொழிகள் சான்றிதழ் வகுப்புகள்

பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும்.

சிகரம் - சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம்

இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், குதிரையேற்றம் (Equestrian), துடுப்புப் படகு ஓட்டுதல் (Rowing), மற்றும் காற்றலைச் சறுக்கு விளையாட்டு (Wind surfing) ஆகிய பயிற்சிகள். சென்னை, இராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் கோவளம் ஆகிய இடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கும். "சிகரம் - சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.

வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்

ஆதி திராவிட விவசாயிகள் உற்பத்தியை பெருக்க ஏதுவாக, 90 சதவீதம் மானியத்துடன் கூடிய விரைவு மின் இணைப்பு வழங்கும் "வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக "விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்" செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூரில் வணிக மையம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், உரிய வாய்ப்புகளை உருவாக்கவும், வருவாய் ஈட்டவும் கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.