சொந்த வீடா? ஏசி உள்ளதா? - உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றப்போகும் 33 கேள்விகள்!
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூலை 17- ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளன.
அதேபோல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் சுமார் 50,000 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். வீடு, வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து சொத்து, வாகனம், அடிப்படை வசதிகள், கழிப்பிடம் உள்ளதா?, வருமானம் என்ன? சைக்கிள் உள்ளதா? இருசக்கர வாகனம் உள்ளதா? கார் உள்ளதா? வாடகை வீடா? சொந்த வீடா? வீட்டில் பிரிட்ஜ் உள்ளதா? ஏசி உள்ளதா? உள்ளிட்ட 33 கேள்விகளைக் கேட்டு அவர்கள் அளிக்கும் பதிலை டிஜிட்டல் முறையில் பதிவுச் செய்யவுள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகள் அடங்கிய அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதனிடையே, 2027- ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவுச் செய்துள்ள மத்திய அரசு, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துகிறது. நாடு முழுவதும் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 32 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கை ஏற்றத்திற்கும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் ஆகும். ஏனெனில் இந்த கணக்கெடுப்பில் உள்ள விவரங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மத்திய அரசு புதிய செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தும். இதன்மூலம் தனிநபரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியிலாக பெரும் மாற்றத்தைக் காண முடியும்.
எனவே, அரசு அலுவலர்கள் தங்களது வீட்டிற்கு வரும் போது அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்து ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

