மதுரை ரயில் தீ விபத்து - 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

 
tn

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை வந்த சுற்றுலா ரயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். தனியார் சுற்றுலா நிறுவனம் தொடர்பான தகவல் எதுவும் இல்லை என ரயில்வே போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர். தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கூறியுள்ளார்.  

tn

இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். லக்னோவில் இருந்து மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர், விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டது, இதற்கு அனுமதி அளித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.